Monday, January 19, 2015

கரையெல்லாம் செண்பகப்பூ - ஒரு விமர்சனம்

புத்தக கண்காட்சியில் இந்த முறை வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களுடன் சில சுஜாதா நாவல்களையும் வாங்கினேன். அதில் ஒன்றுதான் கரையெல்லாம் செண்பகப்பூ. இந்த முறையும் நீலகண்ட சாஸ்திரிகளின் "சோழர்கள்" புத்தகத்தை வாங்கவில்லை. :(

சிறு வயதில் ஏற்படும் எதிர்பால் ஈர்ப்புகளை ஆங்கிலத்தில் கிரஷ் என்று கூறுவதுண்டு. எனினும் அது சம்பந்தமாக எந்த ஒரு நூலையும் படித்ததில்லை. முக்கியமாக எந்த தமிழ் புத்தகத்திலும் படித்ததில்லை. முதல் முறையாக இந்த புத்தகத்தில் படித்தேன். கல்யாணராமன் மற்றும் வள்ளியின் கதாப்பாத்திரங்கள்  வாயிலாக உணர்ந்தேன் என்று கூட கூறலாம். இந்த நூல் கிரஷ் என்பதை மட்டும் கையாளவில்லை. அதையும் தாண்டி. ஒரு த்ரில்லர் வகை நாவல் என்று கூறலாம்.

கல்யாணராமன் நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு கிராமத்திற்கு செல்கிறான். ஒரு த்ரில்லர் நாவலில் வழக்கமாக இருக்க வேண்டிய ஒரு பாழும் ஜமீன் பங்களாவில் தங்குகிறான். சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. இதன் ஊடே அவனுக்கு கிராமத்தில் இருக்கும் வள்ளியின் மீது ஒரு ஈர்ப்பு. வள்ளிக்கோ தனது மாமனான மருதமுத்து மீது காதல்.

இதனிடையே கிராமத்திற்கு ஜமீன் வாரிசாக சினேகலதா வந்து சேருகிறாள். சினேகலதாவின் மேற்க்கத்திய ஆடைகளால் மருதமுத்துவின் மனம் சஞ்சலம் அடைகிறது. இதனால் வள்ளி மருதமுத்து இடையே ஒரு விரிசல் ஏற்படுகிறது. இரவில் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்கின்றன. அதை தொடர்ந்து ஒரு மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. வள்ளியின் மீது பழி விழுகிறது. உண்மையாக நடந்தது என்ன. வள்ளி இதிலிருந்து வெளி வந்தாளா. அவள் யாருடன் இறுதியில் இணைகிறாள் என்பதுதான் மீதி கதை.

புத்தகத்தில் என்னை ஈர்த்தது ஆங்காங்கே இடைச்செருகலாக தோன்றும் சில மனிதர்கள். முக்கியமாக கூறவேண்டுமென்றால் பெரியாத்தா, வள்ளியின் தம்பி, தங்கராசு மற்றும் பயாஸ்கோப்காரனையும் கூறலாம். பெரியாத்தா பாடும் நாட்டுப்புற பாடல்கள் நன்றாக இருக்கிறது.

பயாஸ்கோப்காரனை அறிமுகப்படுத்த  சுஜாதா வர்ணிக்கும் வரிகள் இருக்கிறதே. அவருடைய கற்பனை அப்படியே நம் முன் நிஜமாக விரிகிறது. இந்த புத்தகத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் பொது சுஜாதாவின் வர்ணிப்புகள் இப்படித்தான் இருக்கின்றன.

புத்தகத்தை எடுத்த அரை நாளில் முடித்தாகிவிட்டது. புத்தகம் அவ்வளவு சிறியது எனினும் விறுவிறுப்பு நம்மை விரைவில் முடிக்க வைத்துவிடுகிறது. படிக்க வேண்டிய புத்தகம். சிறிய புத்தகம் என்பதால் சிறிய விமர்சனம். :-)

No comments:

Post a Comment