Tuesday, October 21, 2014

கிண்டில் பேப்பர்வைட்டில் படிக்கும் அனுபவம் (A Reading Experience on Kindle Paperwhite)

வெகு நாட்களாக தமிழ் புத்தகங்களை மட்டுமே வாசித்து வருகிறோமே. அதுவும் குறிப்பாக வரலாற்று புதினங்களை மட்டுமே படித்து வருகிறோமே .. எப்பொழுதுதான் ஆங்கில புத்தகங்களை வாசிக்க தொடங்குவது. நமது வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமே என்று சிந்தித்து வந்தேன். ஏற்கனவே வாங்கிய தமிழ் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கே ஒரு அலமாரி முழுவதும் ஆகிவிட்டது. இதற்கே வீட்டில் பல்வேறு வசவுகளும் திட்டுகளும் விழுந்து வருகின்றன. இதில் ஆங்கில புத்தகங்களையும் வாங்க தொடங்கிவிட்டால் அவ்வளவுதான்.

என்னதான் செய்வது என்று முழி பிதுங்கியது. அலுவலகத்தில் சக நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவன் கிண்டில் (Kindle) எனப்படும் மின்கருவியை (Electronic Device) பற்றி கூறினான். என்னை போன்ற புத்தக புழுக்களுகாக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி என்றான். ஆயினும் எனக்கு திருப்தி வரவில்லை. அதிகமாக படிக்கும் வழக்கம் உள்ள எனக்கு அக்கருவியை அதிகம் பார்த்தால் கண்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று பயம்.  ஏற்கனவே எட்டு மணி நேரம் கணினியுடன் எனது கண்கள் சீரழிகின்றன. இதில் இது வேறா என்று நினைத்தேன்.

நீண்ட நெடிய சிந்தனைக்கு பிறகு எவ்வளவோ பாத்துட்டோம்!! கழுத இதையும் பாத்துடுவோம்!!என்று முடிவு செய்தேன். இதற்கிடையில் எனது நண்பன் அவனது கிண்டிலை கொண்டுவந்து காண்பித்தான். ஓரளவிற்கு திருப்தி ஆக இருந்தது. மீண்டும் மீண்டும் குழப்பி கொண்டால் எடுத்த முடிவில் இருந்து விலகி விடுவோம் என்று அடுத்த இரு நாட்களில் அமேசான்(Amazon) வலைத்தளத்தில் மட்டுமே கிடைக்ககூடிய அரிய வகை பொருளான கிண்டில் பேப்பர் வைட்டை (Kindle Paperwhite) ஆர்டர் செய்தேன்.. :)

அடுத்த நாளே எனது கையில் கிண்டில் தவழ தொடங்கியது. வாங்கிய புதிதல்லவா. இருக்கும் ஆப்ஷன்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். கத்தி போய் வால் வந்த கதையாக இதை என்னமாக வாங்குவாய் என்று வீட்டில் அப்பாவும் அம்மாவும் கேட்டார்கள். எப்படியோ சமாளித்து விட்டேன். நாக்கு தள்ளிவிட்டது.

இரு நாட்களுக்கு பிறகு கிண்டில் வாங்கிவிட்டோம். என்ன புத்தகத்தை படிப்பது என்ற கவலை தொடங்கியது. முதலில் ஏதாவது புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிக்க வேனும். அப்பொழுதுதான் கொடுத்த காசுக்காச்சும் படிப்போம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதற்கு முன் இது தமிழ் எழுத்துகளை சப்போர்ட் செய்யுமா என்று டெஸ்ட் செய்து விடுவோம் என்று Project Madurai இணையதளத்தில் இருந்து பொன்னியின் செல்வனை பதிவிறக்கம் செய்து அதை கன்வெர்ட் செய்து படித்து பார்த்தேன். அடடா!! அப்படியே பேப்பரில் படிப்பது போல் இருந்தது. ஆனால் புது புத்தகம் வாங்கியவுடன் அதில் வீசும் வாசம் இதில் தெரியாது என்பது ஒரு குறையே!! :P
  
முதலில் விலை கொடுத்து வாங்கப்போகும் அந்த புத்தகம் என்ன என்று மண்டை காய்ந்தது. சிறிய வயதில் இருந்தே மால்குடி டேஸ் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று அவா. சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று பாத்துடுவோம் என்று 117 ருபாய் கொடுத்து  Malgudi Days - Short Stories From An Astrologer's Day என்னும் புத்தகத்தை வாங்கி வாசிக்க தொடங்கினேன். வாசிப்பதற்கு மிகவும் வாட்டமாகவும் வசதியாகவும் கிண்டில் இருக்கிறது. கிண்டிலில் படிப்பதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது இது வரை. புத்தகங்களின் எடையை விட இதன் எடை குறைவல்லவா.

மால்குடி விமர்சனம் அடுத்த பதிவில்.. 

No comments:

Post a Comment