Saturday, June 14, 2014

பொன்னியின் செல்வன் நாடகம் ஒரு விமர்சனம் - I (Ponniyin Selvan Drama Review - Part 1)

எப்பொழுதும் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் இறங்க வேண்டிய இடம் வந்தது. நிறுத்தத்தில் ஒரு விளம்பரம். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் வழங்கும் "பொன்னியின் செல்வன்" என்று. முழு நாவல் 3 1/2 மணி நேர நாடகமாக என்று போட்டிருந்தது. அடுத்த நாள் வெளிவந்த ஆனந்த விகடன் புத்தகத்தை மொபைலில் படித்து கொண்டிருந்த பொழுது பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேறுவதை ஒட்டி சில பரிசு போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. எனது சக நண்பர்கள் இருவரிடம் கேட்ட பொழுது வர ஒப்புக்கொண்டனர். அதை அடுத்து டிக்கெட்டுகளை வலைத்தளத்தில் புக் செய்தோம். நாங்கள் புக் செய்யும் போதே சனி மற்றும் ஞாயிறுக்கான டிக்கெட்டுகள் காலியாகிருந்தன. எனவே வெள்ளி கிழமை அப்படியே அலுவலகத்தில் இருந்து சென்று விடலாம் என்று புக் செய்தோம்.

அந்த நாளும் வந்தது. அலுவலகத்தில் வழக்கம் போல் ஒரு பொய்யை கூறிவிட்டு சீக்கிரம் கிளம்பினோம். வண்டிகளை பார்க் செய்வதற்குள் எங்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. அரங்க வாயிலில் சில பல தகவல்கள் புத்தகத்தை பற்றியும் சோழர்களின் வாழும் கோவில்களை பற்றியும் சில புகைப்படங்களும் சில தகவல் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. "ஏட்டு!!! ஏற்கனவே லேட்டு" என்று என் உள்மனம் கூறியதால் அரக்க பரக்க அரங்கத்திற்குள் ஓடினோம்.

நண்பர்களுடன் படம் பார்க்கையில் இது வரை படத்தின் டைட்டில் போடுவதை பார்த்ததே இல்லை. இதிலும் அப்படியே. உள்ளே அடித்து பிடித்து நுழையும் போதே நாடகம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் ஆகியிருக்கும் போல் தெரிந்தது. என் நண்பர்கள் இருவரும் புத்தகத்தை படிக்காதவர்கள். அவர்கள்  என்னுடைய ஆர்வக்கோளாறு காரணமாக வந்திருந்தார்கள். மேலும் இதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்ற ஒரு ஆர்வமும் சேர்ந்து விட்டிருந்தது. அரங்கம் மிகவும் சாதாராணமாக இருந்தது போல் தான் முதலில் தெரிந்தது. தோட்டா தரணி நம்மை ஏமாற்றி விட்டாரோ என்று நினைக்கும் வகையில் மிகவும் சாதாரணமாக தோன்றியது. 

10 நிமிடங்கள் ஆகி விட்டிருந்தாலும் வந்தியத்தேவன் அறிமுகமாகும் காட்சி அப்பொழுதுதான் வந்தது. திரை அரங்குகளில் பிரபல நடிகர் திரையில் தோன்றும் பொழுது விசிலடிச்சான் குஞ்சுகள் காது கிழிய விசில் அடிப்பார்கள். அது போல் வந்தியத்தேவனுக்கு அடித்தார்கள். எனக்கு விசில் அடிக்க வராத காரணத்தினால் கை தட்டலோடு அடங்கிவிட்டேன். அதற்கு முன்னர் ஆழ்வார்க்கடியான் வரும் பொழுது இதை விட பலத்தமான வரவேற்பு. 

பொன்னியின் செல்வன் புத்தகத்தை பொறுத்த வரை பல முக்கிய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் கதை மற்றும் சம்பவங்கள் வந்தியத்தேவனை சுற்றியே நடப்பதால் அவரே கதைநாயகன். வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ஏற்றிருப்பவர் புது முகமானாலும் தனது இயல்பான நடிப்பில் மக்களை கவர்கிறார். வசனங்களை பிழையில்லாமல் பேசுவது அவருடைய இன்னொரு ப்ளஸ். ஆனால் பாவம் நாடகம் முழுவதும் ஒரே உடை தான் அணிந்து வருகிறார். 

புத்தகத்தில் வந்தியத்தேவனுக்கு அடுத்து வாசகர்கள் ரசிக்கும் கதாப்பாத்திரமாக ஆழ்வார்க்கடியான் அமைக்கப்பட்டிருக்கும். அதனாலோ என்னவோ ஆழ்வார்க்கடியான் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறார். ஆங்காங்கே ஆழ்வார்க்கடியான் நம்மை கிச்சு கிச்சு மூட்டினாலும் அவருடைய வைணவ சண்டைகள் ஒன்றிரண்டை சேர்த்துவிட்டிருக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம். மேலும் ஆழ்வார்க்கடியானே குடந்தை ஜோதிடராக நடித்து ரசிகர்களை மேலும் குழப்புகிறார். புத்தகத்தில், சிவன் கோவிலின் மதிலில் அமர்ந்திருக்கும் காக்கை தனது தலையில் கல்லை தூக்கி போடும் பொழுது கூட வலியை பொறுத்து கொண்டு காக்கையை பார்த்து அப்படித்தான், சிவன் கோவிலை இடி என்று கூறுவார் ஆழ்வார்க்கடியான். ஆனால் நாடகத்தில் அவர் சிவனின் திருநீரை தனது நெற்றியில் அவரே தடவிக்கொண்டு குடந்தை ஜோதிடராக மாறுகிறார். புத்தகம் படிக்காதவர்கள் குழம்புகிறார்கள்.

நீண்ட வலைப்பதிவாக இருப்பதால் இரண்டாக பிரித்து எழுதுகிறேன்.. 

No comments:

Post a Comment