Thursday, April 17, 2014

ராஜகேசரி – புத்தக விமர்சனம் (Rajakesari - Book Review)

வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என்றாலே கதைக்களம் பெரும்பாலும் மன்னர்களை அல்லது இளவரசர்களை சுற்றியே அமையும். வெகு சில புத்தகங்களே இதில் இருந்து மாறுபடும். மாறுபடும் புத்தகங்கள் கூட சில சமயம் முழு நீள காதல் காவியங்களாக அமைந்து விடுவதுண்டு. இவ்வகை புத்தகங்களில் இருந்து சற்றே மாறுபட்டு. இல்லை இல்லை. முற்றிலும் மாறான ஒரு கோணத்தில் எழுதப்பட்டது ராஜகேசரி என்னும் புதினம். புத்தகத்தை இரண்டாம் முறையாக வாசிக்கும் பொழுது இவ்வலைப்பூவை எழுத வேண்டும் என்று தோன்றியது.

புத்தகத்தை முதல் முறை வாசித்து முடிக்கும் பொழுதும் சரி இரண்டாம் முறை வாசித்து கொண்டிருக்கும் பொழுதும் சரி, என்னையும் அறியாமல் ஆசிரியரின் உழைப்பை பற்றி பெருமிதம் கொள்ள செய்தது. இதை போன்று ஒரு கதையை சிந்தித்ததற்கே ஆசிரியருக்கு ஒரு ஷொட்டு. J

புத்தகம் ராஜ ராஜ சோழரின் காலத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. எனினும் நம் மரியாதைக்குரிய ராஜ ராஜ சோழர் கதையில் மிகச்சிறிய பங்கே வகிக்கிறார். புத்தகத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள் பரமன் மழபாடியார் மற்றும் அம்பலவாணர் ஆவர். இவர்களுள் அம்பலவாணர் அரைக்கிழவர் மற்றும் ஒரு சாதாரண குடிமகன். பரமன் மழபாடியார் ஒரு உயரதிகாரி.

ஒரு நாள் அம்பலவாணர் இரவு கூத்து முடிந்து தன் அகத்திற்கு செல்லும் வழியில் ஒரு கொலை நடக்கிறது. அக்கொலையை அம்பலவாணர் மறைவில் இருந்து பார்த்து விடுகிறார். கொலையுண்டவன் தனது வாழ்க்கையின் கடைசி மணித்துளிகளில் அம்பலவாணரிடம் ஏதோ ஒரு சதியை பற்றிய செய்தியை அங்கொன்றும் இங்கொன்றுமாக கூறி விட்டு இறக்கிறான். ஏதோ பெரிய விஷயமாக இருக்கும் என்று அம்பலவாணரும் தஞ்சைக்கு சென்று விஷயத்தை அதிகாரிகளிடம் கூறி விட்டு வந்துவிடுவோம் என்று புறப்படுகிறார்.

அதே சமயத்தில் ராஜராஜ மாராயர் தன்னை வந்து சந்திக்க வேண்டிய ஒற்றன் இரு நாட்களாகியும் வரவில்லையே என்று கவலை கொள்கிறார். அரசரை சதய நாளில் கொலை செய்யவிருக்கும் சதியை பற்றி அந்த ஒற்றன் தகவல் கொணர்வதால் விஷயம் அவரது கவலையை அதிகரிக்கிறது. இவ்விஷயத்தை தனது பிரதான சீடனான பரமன் மழபடியாரிடம் ஒப்படைக்கிறார்.

அம்பலவாணரும் தஞ்சை வந்தடைந்து ராஜ ராஜ மாராயரை சந்திக்க முற்படுகிறார். சந்திக்க முடியாத சூழ்நிலையில் மாளிகையை விட்டு வெளியேறுகிறார். மழபாடியார் சில பல முயற்சிகளுக்கு பிறகு அம்பலவாணரை சந்திக்கிறார். தகவல்கள் ஒத்து போக சதியை தடுக்க இருவரும் இணைந்து முயல்கிறார்கள். சதியை தடுத்தார்களா, முயற்சியில் வெற்றி பெற்றார்களா, சதய நாள் விழா எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் முடிந்ததா என்பதே கதைச்சுருக்கம்.

கதை மிக சாதாரணமாக நம் கண்களுக்கு தெரிந்தாலும் கோகுலின் நடை மற்றும் கதையை முன்னெடுத்து செல்லும் பாணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கு வந்து செல்லும் கதாப்பாத்திரங்கள் கூட நம் மனதில் ஆழ பதியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் சாமான்ய மக்களுக்கு புரிகின்ற வகையில் தான் பாத்திரங்கள் பேசும் வாசனைகள் உள்ளன. சில புத்தகங்களில் உள்ளது போல் வாசிப்பதற்கே மிகவும் சிரமமான பெயர்களோ வசனங்களோ இல்லை என்பது மற்றுமொரு ப்ளஸ்.


சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இப்புத்தகத்தை வாங்குவோர் அடுத்து சில நாட்களிலேயே அடுத்த புத்தகத்தை வாங்கிவிடுவர். அவ்வளவு வேகத்தில் புத்தகம் படிப்பவர்களால் முடிக்கப்பட்டுவிடும். J

பைசாசம் புத்தக விமர்சனத்தின் உரலி இங்கே

No comments:

Post a Comment