Tuesday, November 22, 2016

அவனி முதல் பாகம் (Avani - First Part by Balakumaran) - ஒரு விமர்சனம்

வெகு நாட்களுக்கு பிறகு வலைப்பதிவை மறுபடியும் எழுத துவங்க முடிவு செய்துள்ளேன். :-)

பொன்னியின் செல்வன் முதலே சோழர்களை பற்றிய புத்தகம் என்றாலே எனக்கு தனி பிரியம். புத்தகத்தை வாங்கும் முன்னரே அவனி புத்தகத்தின் முன்னுரையை படிக்க சென்னையில் நடந்த புத்தக திருவிழாவில் சந்தர்ப்பம் வாய்த்தது. அப்பொழுதே பாலகுமாரன் அவர்கள் எழுதிய புதிய வரலாற்று புதினமான இந்த புத்தகத்தை வாங்கிவிட நினைத்தேன். ஆனால் வாங்க இயலவில்லை. இரு வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த எனது பிறந்த நாளை ஒட்டி எனது மனைவி இந்த புத்தகத்தை எனக்கு வாங்கிதந்தார்.  

இரண்டாம் குலோத்துங்க சோழருக்கு பிறகு சிம்மாசனம் ஏறிய இரண்டாம் ராஜராஜ சோழர் (அ) ராஜகம்பீரர் பற்றி எழுதப்பட்ட வரலாற்று புதினம். தாராசுரம் பகுதியில் மிகவும் நுட்பமாக கட்டப்பட்ட ஐராவதீஸ்வரர் கோவில் எப்படி கட்டப்பட்டது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டது. 

இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான சோழ நாட்டிற்கு அழைத்து செல்கிறது. 

புத்தகத்தின் பெரும்பாலான பகுதி வாணிபம் மற்றும் வணிகர்களை மையப்படுத்தி நகர்கிறது. பாதி பக்கங்களை கடக்கும் வரை பெரும் போர்களை சந்தித்து விட்டு அமைதியான சூழலில் இருக்கும் சோழ நாட்டில் அதிகாரவர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்களை கூறுகிறது. மிகவும் சிந்தித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன். எனினும் ஒரு கோர்வையாக இல்லாதது போல் உள்ளது. ஒரு விஷயம் நடக்கும் பொழுதே பக்கங்கள் சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி போகிறது.


ஒவ்வொரு படைப்பும் அந்த ஆசிரியரின் சிறந்த படைப்போடு ஒப்பிடப்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் இந்த புத்தகத்தை உடையார் உடன் ஒப்பிடும் பொழுது அதில் இருந்த சுவை இதில் சற்று கம்மியோ என்று எண்ண வைக்கிறது. உடையார் ராஜ ராஜ சோழர் காலத்தை மையமாக வைத்து எழுதியது. போர்கள், காதல், ஒற்றர் படை, பிரம்மராயர், ராஜேந்திர சோழருடன் நடக்கும் பனிப்போர் என்று மிக பெரிய கதைக்களத்தில் புனையப்பட்டது. இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை அப்படியே ஒன்றிப்போக செய்துவிடும். ஆனால் அது போல் ஒரு கோர்வையாக இந்த புத்தகம் இல்லை. வணிகர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக உள்ளது. 


ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சோழ நாட்டை பாலகுமாரன் காட்டியிருக்கிறார். போரற்ற காலத்தில் நடப்பதால் அரசரும் அவ்வப்போழுதே வந்து போகிறார். நான்கு பாகங்கள் வரும் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். :-)

Saturday, May 23, 2015

வீரபாண்டியன் மனைவி(Veerapandiyan Manaivi) பாகம்-I - ஒரு விமர்சனம்

வேலைப்பளு மற்றும் போக்குவரத்து இடைஞ்சல்களுக்கு நடுவில் இருசக்கர வாகனத்தில் சென்று வருவதால் கடந்த இரு மாதங்களில் என்னால் எதுவும் எழுதவியலவில்லை. இப்பொழுது எல்லாம் வேலைப்பளு இல்லையா என்று கேட்காதீர்கள். வேலைப்பளு பழகிவிட்டது. இடைப்பட்ட நேரங்களில், மறுபடியும் புத்தகமும் கையுமாக அலைய ஆரம்பித்துவிட்டேன். அதன் விளைவுதான் இந்த பதிவு.

எனக்கு, பெரிய புத்தகங்கள் அதுவும் வரலாறு சம்பந்தப்பட்ட பெரிய புத்தகங்கள் என்றால்  ஒரு அலாதிதான். வீரபாண்டியன் மனைவி மூன்று பாகங்களும் சுமார் 1700 பக்கங்களும் கொண்டது. நெடுநாட்களாக எனது அலமாரியில் தூசு படிந்து கிடந்தது. முதல் புத்தகத்தை தூசு தட்டி படிக்க ஆரம்பித்தேன். 400 பக்கங்கள். சும்மா விறுவிறுவென்று முடிந்துவிட்டது.

வரலாற்று புத்தகங்கள் என்றாலே ராஜாக்களும் பல நல்லவர்களும் சில கெட்டவர்களும் இருப்பர். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையே சண்டை மூளும். இறுதியில் மாரல் சயின்ஸ் கதையை போல் நல்லவர்கள் வெல்வார்கள். இதை போன்று கிளிஷேக்களை(cliche) உடைய பல புத்தகங்களை படித்தாகிற்று. இந்த புத்தகத்திலும் அதே கிளிஷேக்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.


வீரபாண்டியன் மற்றும் விக்கிரமபாண்டியன் இடையே நடக்கும் பங்காளி சண்டைதான் கதையின் மையக்கரு. வீரபாண்டியன் ஆளும் பாண்டிய நாட்டை மூன்றாம் குலோத்துங்கனின் படைகள் முற்றுகையிட்டு தங்களுக்கு சாதகமாக நடக்கக்கூடிய விக்கிரமபாண்டியனை ஆட்சியில் அமர்த்த முயற்சிக்கிறது. படைகளை தலைமை தாங்கி பல தலைவர்கள் வருகிறார்கள். குறிப்பிட தகுந்தோர் ஜனநாதன், வீரசேகரன்.

வீரசேகரன் பெயருக்கு ஏற்றார் போல் தனது வீர பராக்கிரமங்களை உபயோகித்து மதுரையை பிடிக்கிறான். வீரபாண்டியன் மற்றும் அவரை சார்ந்தோர் தென்பாண்டி நாட்டிற்கு ஓடுகின்றனர். வீரபாண்டியனை "அவர்" என்று நான் விளித்ததில் இருந்து வரலாற்று நாவலில் வழக்கமாக வரும் தர்மவான் கதாபாத்திரம் அவர்தான் என்பதை நீங்கள் கண்டுப்பிடித்திருப்பீர்கள். வீரசேகரன் மற்றும் ஊர்மிளாதான் கதையின் நாயகன் மற்றும் நாயகி ஆவர். வீரசேகரன் சோழ நாட்டவன். ஊர்மிளாவோ வீரபாண்டியன் கட்சியை சேர்ந்தவள். ஊர்மிளாவிற்கு பின் சில மர்மங்கள். இருவரும் எப்படியோ காதல் வலையில் விழுகின்றனர்.

என்னை பொறுத்தவரை முதல் பாகத்தில் எனக்கு பிடித்த கதாப்பாத்திரம் ஜனநாதன் தான்,ஜனநாதன் பேசும் வசனங்கள் எல்லாம் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதியின் வசனங்கள் போல் இருக்கின்றன. அன்றைய படைத்தலைவர்கள் இப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்று நினைக்கவைக்கிறது. ஆனால் பெரும்பாலான புத்தகங்கள் படைத்தலைவர்கள், சேனாதிபதிகள், இளவரசர்கள், மன்னர்கள் ஆகியோரை தர்மவான்களாக அல்லது மிகவும் கெட்டவர்களாகவோ தான் சித்தரிக்கும். ஒரு சில புத்தகங்களில் தான் மிகவும் ப்ராக்டிகலாக இருக்கும். இந்த புத்தகத்தில் வரும் ஜனநாதன் ஒரு ப்ராக்டிகலான அரசியல்வாதி.

முதல் பாகத்தின் பெயர் யுத்த காண்டம் என்றும் அத்தியாயங்களின் தலைப்பு ராமாயணத்தின் அத்தியாயங்களின் தலைப்புகளாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாதன் என்ற ஒற்றை மனிதன் பின்னும் வலையை சுற்றி நடக்கிறது முதல் பாகம். சூப்பர் என்று சொல்லலாம்.

இரண்டாம் பாகம் விமர்சனம் விரைவில்...

Tuesday, March 24, 2015

வெற்றி வேந்தன் (Vetri Vendhan) - புத்தக விமர்சனம்

புத்தக கண்காட்சியில் வாங்கிய மற்றுமொரு புத்தகம் என்று வாசகர்களுக்கு சொல்ல தேவையில்லை. 400 பக்கங்களை கொண்டது. உதயணன் எழுதிய புத்தகங்கள் மேல் எனக்கு பெரியதாக அபிப்ராயம் இருந்ததில்லை. கடல் கோட்டை புத்தகத்தின் காரணமாகவும் இருக்கலாம். எனினும் தம்பியின் வற்புறுத்தலை தட்ட முடியவில்லை.

புத்தகம் யாரை பற்றியது தெரியுமாடா என்று கேட்டேன். மூன்றாம் நந்திவர்மன். இரண்டு பாகங்கள். அவரின் வடதிசை மற்றும் தென்திசை போர்களை பற்றியது. செமையா இருக்கும் என்று சொன்னான்.

புத்தகம் வாங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகே படிக்க தொடங்கினேன். கிண்டிலில் ஆங்கில புத்தகங்களையும் படிப்பதால் தமிழ் புத்தகங்களுக்கு முன்போல் நேரம் ஒதுக்க முடிவதில்லை. மேலும் நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் என்பதால் எழுத்து கூட்டி படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. :P

நந்திவர்மன் தனது தந்தையை தோற்கடித்த ராஷ்டிரகூடர்களை பழி வாங்க போர் புரிவதுதான் கதை. நேர்மையான அரசன், துர்குணங்கள் கொண்ட அரசனின் தம்பி, சில வில்லன்கள், சைவம்-பெளத்தம் சமயங்கள் இடையே நிகழும் உரசல்கள், காதல், காமம் என்று சுவாரசியமாக எழுத முயற்சித்திருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு திரைப்படத்தின் பெயர். அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மறக்காமல் சிவனை புகழ்கிறார். ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பினிஷிங் சரியில்லையே என்பதற்கு ஏற்றார் போல் ஆங்காங்கே காம மழையில் நம்மை நனைய வைக்கிறார். நானும் பல ஆசிரியர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் உதயணன் அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட யாரும் எழுதியதில்லை.

ராஷ்ட்டிரகூடத்தின் இளவரசியான சங்காவின் பறவைகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துவதற்கு பதில் நமக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது. சில இடங்களில் புத்தகம் படிக்கிறோமா அல்லது விட்டலாச்சார்யாவின் படம் பார்க்கிறோமா என்று எண்ண வைக்கிறது.

புத்தகத்தின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்று யூகித்து விட முடிவது மற்றுமொரு குறை. நிறைகளை விட குறைகளே புத்தகத்தில் அதிகம். பொதுவாக நான் புத்தகங்களை குறை கூறுவது இல்லை. ஒரு புத்தகம் எழுத கடும் உழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த புத்தகத்தை பொருத்தவரை என்னால் குறை கூறாமல் இருக்க முடியவில்லை. :-(

Friday, February 27, 2015

காந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தக விமர்சனம் (Kandhalur Vasanthakumaran Kadhai)

முதல் முறையாக இரு வருடங்களுக்கு முன் படித்தேன். புத்தகம் நண்பர்கள் வட்டாரத்தில் மாறி மாறி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகம் யாரிடம் உள்ளது என்று நண்பர்களுக்கே தெரியவில்லை. நமது கலக்க்ஷனில் அந்த புத்தகம் இல்லாதது ஒரு உறுத்தலாக இருந்துவந்தது. இந்த முறை புத்தக கண்காட்சியில் புத்தகத்தை வாங்கிவிட்டேன். புத்தகத்தின் விலை இரு வருடங்களில் 40 ருபாய் அதிகமாகி இருக்கிறது. :-(

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எப்பொழுதும் நமக்கு பிடித்தவர்கள் செய்யும் காரியங்களில் நம்மால் குறை கண்டுபிடிக்க இயலாது. சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே எனது விமர்சனம் நேர்மையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரு பயாஸ்டு (Biased) விமர்சனம் என்று வைத்து கொள்வோமே. :-)

 புத்தகத்தின் விமர்சனம் எழுதும் பொழுது கதையை அளவுக்கு அதிகமாக விளித்துவிடுகிறேன் என்று கூறிவருகின்றனர். முடிந்த வரை கதையை கூறாமல் விமர்சிக்க முயற்சிக்கிறேன். மற்றொரு விமர்சனமாக என்னுடைய வலைப்பதிவுகள் மிகவும் சிம்பிளாக உள்ளதாக கூறுகின்றனர். என்னுடைய நோக்கமே அதுதான். வரலாறு சம்பந்தப்பட்டது என்றாலே தூய தமிழிலும் காம்ப்ளக்ஸ் ஆகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை உடைக்கவே முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

வழக்கமான ஒரு கதைதான். ஒரு துறுதுறுப்பான வாலிபன். அவன் செய்யும் செயல்களில் அவனையும் அறியாமல் ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்கிறான். இடைச்செறுகலாக ஒரு இளவரசியுடன் காதல். வாலிபனின் ஆசான் அவனை மீட்டெடுக்க முயற்சிக்கிறார். பிறகு, வாலிபனிடம் மிக பெரிய காரியம் ஒன்று ஒப்படைக்கப்படுகிறது.  அவ்வளவே.

கதையை சுருக்கமாக கூறுகிறேன். வசந்தகுமாரன் யவனன் ஒருவனை துறைமுகத்தில் சந்திக்கிறான். அவனுடைய குதிரைகளை விற்று தறுவதன் மூலம் கமிஷன் பார்க்கலாம் என்று கோட்டை கட்டுகிறான். அசம்பாவிதமாக ஒரு கொலை. மர்மம். பழி வசந்தகுமாரன் மேல் விழுகிறது. தனது குறும்பு பேச்சால் வசந்தகுமாரன் அவனையும் அறியாமல் சதியில் சிக்கி கொள்கிறான். சதியில் இருந்து மீண்டானா இல்லையா என்பதை தனக்கே உரிய நடையில் சுஜாதா கூறியிருக்கிறார்.

வாலிபன் பெயர் வசந்தகுமாரன். ஆசானின் பெயர் கணேச பட்டர். இவ்விரு பெயர்களும் ஏனோ சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கதாப்பாத்திரங்களை ஞாபகப்படுத்துகிறது. புத்தகத்தில் ஆங்காங்கே சுஜாதாவின் புரியாத வசனங்கள் எட்டி பார்க்கிறது. திருதிருவென்று முழிப்பதை விட்டுவிட்டு பிறிதொரு நாள் அர்த்தம் கண்டுபிடிக்கலாம் என்று குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். புத்தகத்தில் குக்கன், சுவான தோன்றல்களே, ஞமலி போன்ற வார்த்தைகள் அடிக்கடி தோன்றுகின்றன. தேடி பார்த்ததில் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தான். நாய். :-)

புத்தகத்தின் பக்கங்களும் அத்தியாயங்களும் மிக சிறியது என்பதால் எடுத்த வேகத்தில் புத்தகம் முடிந்துவிடும். அனைவரும் விரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். :-)



Sunday, February 8, 2015

கோமகள் கோவளை - ஒரு புத்தக விமர்சனம்

புத்தக கண்காட்சியில் சிக்கிய மற்றொரு புத்தகம். மு மேத்தா அவர்கள் எழுதியது. வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே புத்தகத்தின் முன்னுரையை அங்கேயே வாசித்தேன். புத்தகம் சோழர்களை பற்றியது என்றும் அதிலும் வீரராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்தில் நடக்கும் கதை என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் உடனே வாங்கிவிட்டேன்.

புத்தகத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கோவளை வீரராஜேந்திர சோழரின் மகள். முதல் 2-3 அத்தியாயங்களில் அதிராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர், அதிராஜேந்திர சோழர் மற்றும் மேலை சளுக்க இளவரசனாகிய விக்ரமாதித்யன் ஆகியோர் அறிமுகமாகி விடுகின்றனர். குலோத்துங்க சோழனை மேல் எனக்கு ஒரு தனி அபிமானம் உண்டு. இப்புத்தகத்தில் ஏதேனும் புதிதாக இருக்குமோ என்று நினைத்து படித்தேன். குலோத்துங்க சோழரை வழக்கமான ஒரு வீரனாக, ஒரு காதலனாக சித்தரித்து உள்ளாரே தவிர ஒன்றும் புதிதாக இல்லை.

கதையும் சரி, கதையை நகர்த்தி செல்லும் விதமும் சரி ஒன்றும் புதுமையாக இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்று முன்கூட்டியே யூகித்து விட முடிவது புத்தகத்தின் அதிமுக்கியமான குறை. கதையை கூறிவிட்டால் இப்புத்தகத்தை யாரும் வாங்கமாட்டீர்கள் என்பதால் கதையை கூறப்போவதில்லை.

புத்தகத்தின் ஓரிரு அத்தியாயங்கள் நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் புத்தகத்தின் குறைகள் நிறைகளை தோற்கடித்து விடுகிறது. ஆங்காங்கே மு மேத்தா கதையில் இருந்து நழுவி டாக்குமெண்டரி படம் போல் பல பக்கங்களை சோழர்கள் பற்றி அவர் படித்த தகவல்களை போட்டு நிரப்பியுள்ளார். நல்ல வேளையாக புத்தகத்தின் பக்கங்கள் வளர வளர இது குறைந்து விடுகிறது.

கதையை எழுத்தாளர் முடித்த விதம் என்னை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியது. புத்தகத்தை முடிக்க தெரியாமல் முடித்துவிட்டார் என்று கூறலாம். புத்தகத்தை படிப்பவர்கள் இந்த கருத்தோடு ஒத்து போவார்கள் என்று நம்புகிறேன். இப்புத்தகத்தை மற்றவர்கள் வாசிக்கலாமா வேண்டாமா என்று கருத்து கூறும் அளவுக்கு நான் பெரிய விமர்சகன் இல்லை. வரலாறு சம்பந்தப்பட்ட புதினங்களை வாசிப்பவர்களுக்கு தெரியும் வீரராஜேந்திர சோழரை பற்றி எழுதப்பட்ட புதினங்கள் மிகவும் குறைவு என்று. எனவே வரலாறு படிப்பவர்கள் கண்டிப்பாக வாங்குவார்கள் என்றே நினைக்கிறேன்.

Monday, January 19, 2015

கரையெல்லாம் செண்பகப்பூ - ஒரு விமர்சனம்

புத்தக கண்காட்சியில் இந்த முறை வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களுடன் சில சுஜாதா நாவல்களையும் வாங்கினேன். அதில் ஒன்றுதான் கரையெல்லாம் செண்பகப்பூ. இந்த முறையும் நீலகண்ட சாஸ்திரிகளின் "சோழர்கள்" புத்தகத்தை வாங்கவில்லை. :(

சிறு வயதில் ஏற்படும் எதிர்பால் ஈர்ப்புகளை ஆங்கிலத்தில் கிரஷ் என்று கூறுவதுண்டு. எனினும் அது சம்பந்தமாக எந்த ஒரு நூலையும் படித்ததில்லை. முக்கியமாக எந்த தமிழ் புத்தகத்திலும் படித்ததில்லை. முதல் முறையாக இந்த புத்தகத்தில் படித்தேன். கல்யாணராமன் மற்றும் வள்ளியின் கதாப்பாத்திரங்கள்  வாயிலாக உணர்ந்தேன் என்று கூட கூறலாம். இந்த நூல் கிரஷ் என்பதை மட்டும் கையாளவில்லை. அதையும் தாண்டி. ஒரு த்ரில்லர் வகை நாவல் என்று கூறலாம்.

கல்யாணராமன் நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு கிராமத்திற்கு செல்கிறான். ஒரு த்ரில்லர் நாவலில் வழக்கமாக இருக்க வேண்டிய ஒரு பாழும் ஜமீன் பங்களாவில் தங்குகிறான். சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. இதன் ஊடே அவனுக்கு கிராமத்தில் இருக்கும் வள்ளியின் மீது ஒரு ஈர்ப்பு. வள்ளிக்கோ தனது மாமனான மருதமுத்து மீது காதல்.

இதனிடையே கிராமத்திற்கு ஜமீன் வாரிசாக சினேகலதா வந்து சேருகிறாள். சினேகலதாவின் மேற்க்கத்திய ஆடைகளால் மருதமுத்துவின் மனம் சஞ்சலம் அடைகிறது. இதனால் வள்ளி மருதமுத்து இடையே ஒரு விரிசல் ஏற்படுகிறது. இரவில் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்கின்றன. அதை தொடர்ந்து ஒரு மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. வள்ளியின் மீது பழி விழுகிறது. உண்மையாக நடந்தது என்ன. வள்ளி இதிலிருந்து வெளி வந்தாளா. அவள் யாருடன் இறுதியில் இணைகிறாள் என்பதுதான் மீதி கதை.

புத்தகத்தில் என்னை ஈர்த்தது ஆங்காங்கே இடைச்செருகலாக தோன்றும் சில மனிதர்கள். முக்கியமாக கூறவேண்டுமென்றால் பெரியாத்தா, வள்ளியின் தம்பி, தங்கராசு மற்றும் பயாஸ்கோப்காரனையும் கூறலாம். பெரியாத்தா பாடும் நாட்டுப்புற பாடல்கள் நன்றாக இருக்கிறது.

பயாஸ்கோப்காரனை அறிமுகப்படுத்த  சுஜாதா வர்ணிக்கும் வரிகள் இருக்கிறதே. அவருடைய கற்பனை அப்படியே நம் முன் நிஜமாக விரிகிறது. இந்த புத்தகத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் பொது சுஜாதாவின் வர்ணிப்புகள் இப்படித்தான் இருக்கின்றன.

புத்தகத்தை எடுத்த அரை நாளில் முடித்தாகிவிட்டது. புத்தகம் அவ்வளவு சிறியது எனினும் விறுவிறுப்பு நம்மை விரைவில் முடிக்க வைத்துவிடுகிறது. படிக்க வேண்டிய புத்தகம். சிறிய புத்தகம் என்பதால் சிறிய விமர்சனம். :-)

Sunday, November 30, 2014

சுங்கம் தவிர்த்த சோழன் - The Chola King who abolished tolls

சுங்கம் தவிர்த்த சோழன் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பட்டமாகும். இப்பட்டத்திற்கு உரியவன் முதலாம் குலோத்துங்கன் ஆவான். அக்காலத்தில் வாணிபர்கள் வாணிபம் செய்ய ஊர் விட்டு ஊர் செல்லும் பொழுது செல்லும் வழியில் எடுத்து செல்லும் பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படும். இன்றைய நாட்களில் விமான நிலையங்களில் அல்லது துறைமுகங்களில் விதிக்கப்படும் கஸ்டம்ஸ் என்பதை போன்றது.

இவ்வாறு விதிக்கப்படும் வரியானது எதற்கு பயன்பட்டிருக்கும் என்று நினைக்கும் பொழுது சில எண்ணங்கள் தோன்றியது.  இரு பெரிய ஊர்களுக்கு இடையே இருக்கும் பெருந்தூரமானது அக்காலங்களில் காடுகளையும் காடுகளில் மறைந்து வாழும் கொள்ளை கூட்டங்களையும் கொண்டிருக்கும். தங்களது பொருட்களை வாணிபம் செய்யப்படும் வாணிகர்கள் காட்டு விலங்குகளாலும் கொள்ளையர் கூட்டங்களாலும் இன்னலுக்கு உள்ளாயினர். இதை தடுக்கும் பொருட்டு காடுகளுக்கு நடுவே வீரர்கள் பாதுகாப்பு அளிக்க தொடங்கியிருப்பர். வேவு பார்ப்பதற்கும் வசதியாக இருந்திருக்கும். இன்றைய நாட்களின் ஊர்க்காவல் படையை போன்றது. :)

அவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் வீரர்களுக்கு தகுந்த சம்பளமும் இன்னபிற இத்யாதிகளும்(Sundries) அளிக்க வேண்டுமே. அதற்காக சுங்கச்சாவடிகள் (Tollgates) அமைக்கப்பட்டன. வணிகர்கள் எடுத்து செல்லும் பொருட்களுக்கு ஏற்பவோ அல்லது வண்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவோ வரிகள் விதிக்கப்பட்டன.

வசூலிக்கப்படும் இவ்வரிகள் பாதுகாவல் வழங்கும் வீரர்களின் சம்பளத்துக்கு மட்டும் அல்லாமல் இன்னபிற விஷயங்களுக்கும் உபயோகப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. உதாரணமாக அருகில் இருக்கும் கோவில்களில் சிற்சில செப்பனிடும் பணிகள், ஊர்க்கால்வாய்களை செப்பனிடும் பணிகளுக்கு உபயோகப்பட்டிருக்கும். அதாவது வசூலிக்கப்படும் சுங்கவரி மீது சுங்கசாவடிகளுக்கு அருகில் இருக்கும் கிராம சபைகளுக்கு அதிக உரிமை இருந்திருக்கக்கூடும். அதாவது கிராம சபைகள் சிற்சில பணிகளுக்கு தேவையான பணத்தை அல்லது நாணயங்களை கிராம சபையே வைத்திருக்கும். சுருக்கமாக கூற வேண்டுமென்றால் கிராம சபைகள் சோழ நாட்டின் தலைநகரத்தை  தங்களது தேவைக்கு அதிகமான செலவினங்களுக்கு மட்டுமே அணுகியிருக்கக்கூடும்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் பயன்பட்டு வந்த சுங்கவரியை ஏன் முதலாம் குலோத்துங்கன் ஏன் மொத்தமாக ஒழித்தார். சோழ நாட்டில் நிலவிய பல்வேறு உள்நாட்டு குழப்பங்களை மறைக்க குலோத்துங்கர் இதை ஒரு சூழ்ச்சியாக உபயோகித்தாரா? சுங்கவரியை முற்றிலும் ஒழித்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா? இன்னும் தெளிவான சிந்தனைகள் கிடைக்கவில்லை. தெறிக்கும் சிந்தனைகள் அடுத்த பதிவில்...

தொடரும்....